பாளை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு - சிறையில் பரபரப்பு
பாளை மத்திய சிறையில் தாயை கொலை செய்த வழக்கில் கைதான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார்.
குமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் சரகம் மாதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது மகன் வினோஜ் பல்டன் (40). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தாராம். மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்ததாம். இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதையடுத்து வினோஜை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வினோஜ் கடந்த 2012 ஆம் வருடம் அவரது தாயை கொலை செய்து உள்ளார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து வினோஜ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தாராம். இன்று காலை வினோஜ் உடல் நிலைமோசம் அடையவே சிறைக்காவலர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.